பள்ளி மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள்.. தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

உடுப்பியில் பள்ளி மாணவிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், உடுப்பியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், குழந்தைகள் நலத்துறையிடம் தங்களது தலைமை ஆசிரியர் ராஜேந்திர ஆச்சார் என்பவர் குறித்து புகார் செய்தனர். தங்களை உடல் ரீதியாக பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை நடத்திய விசாரணையில் மாணவிகளின் புகார் உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் மீது கார்கலா ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திர ஆச்சார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
கார்கலா பொலவஞ்சரகட்டே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர ஆச்சார்(58), இச்சோடி மகாலிங்கேஸ்வரர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்தவர். இவர் மீது ஏற்கெனவே பலமுறை பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்று பொலிஸார் கூறினர்.
பள்ளி மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.