பாராளுமன்ற பராமரிப்பு துறை பணிப்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!! பொது செயலாளர் அதிரடி நடவடிக்கை
பாராளுமன்ற பராமரிப்பு துறை உதவிப் பணியாளரை நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர இடைநிறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற பராமரிப்பு துறை பிரிவில் சில பணிப்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் மானபங்கம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்டுபராமரிப்பு துறை உதவிப் பணியாளரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரினால் அண்மையில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
பெண் ஊழியர்கள் குழுவொன்று தானாக முன்வந்து சம்பந்தப்பட்ட குழு முன் ஆஜராகி, தங்களுக்கு நடந்த துஷ்பிரயோகங்கள் தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தினர். அந்த உண்மைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, பராமரிப்பு துறை உதவிப் பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த பணிப்பெண்கள் தமக்கு நேர்ந்த துயரச் சம்பவங்கள் தொடர்பாக பராமரிப்பு துறை உதவிப் பணியாளர் மேலும் பல உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதைத் தடுக்கும் வகையில் பணிப்பெண்களை பல்வேறு வழிகளில் அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழுவொன்று புகார் அளித்துள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்களின் துஷ்பிரயோகம் தொடர்பாக நாடாளுமன்ற மகளிர் மன்றம் தனி விசாரணையையும் தொடங்கியுள்ளது.