மனித கடத்தல் : மியான்மர் மற்றும் ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இலங்கையர்கள்: வெளியான புதிய தகவல்
மியான்மர், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனித கடத்தல் காரணமாக சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மியான்மர் மற்றும் தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, சைபர் குற்றங்களுக்காக மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 55 இலங்கையர்களில் 28 பேரின் விடுதலையை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
“மீதமுள்ள நபர்களை விரைவில் விடுவிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பாலசூரிய மேலும் தெரிவிக்கையில், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள சுமார் 70 ஓய்வுபெற்ற போர்வீரர்களை நாடு திரும்புவதற்கு அமைச்சு வசதி செய்துள்ளது. “அவர்களுக்கு உரிய பலன்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.
சுற்றுலா விசாவில் துபாய், ஓமன் போன்ற நாடுகளுக்குச் சென்று துன்பகரமான சூழ்நிலையில் இருக்கும் இலங்கையர்களைத் திருப்பி அனுப்புவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த நடவடிக்கைகளுக்கு பயனுள்ள வெளியுறவுக் கொள்கை முக்கியமானது, மேலும் திறமையான குழுவைக் கொண்டிருப்பது அவசியம். எமது அமைச்சினால் அரசியல் செல்வாக்கின்றி வெளிவிவகாரச் சேவையில் ஈடுபட முடியும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிசெய்து, நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு எம்மை அனுமதித்துள்ளார்” என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.