ஸ்பெயினில் தீவிரம் அடையும் பருவகால காய்ச்சல் – சிறுவர்கள் அதிகளவில் பாதிப்பு
ஸ்பெயினில் பருவகால காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காய்ச்சல் காரணமாக அதிகளவான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் விரைவாக பருவகால காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் பதிவான நோயாளிகளின் தரவுகளுக்கு அமைய, ஒரு லட்சம் பேருக்கு 16.7 இலிருந்து 20.3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளது.
1 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளும், 5 முதல் 19 வயதுடையவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலுக்கு உள்ளாகும் குழந்தைகள் மூலமாக குடும்பங்களுக்கும், அங்கிருந்து சமூக மட்டத்திற்கும் நோய் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்று நோயை தடுக்கும் வகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.




