SCO உச்சிமாநாடு: புவிசார் அரசியல் கொடுமைப்படுத்தலுக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ள சீனாவின் ஷி

சீன அதிபர் ஸி ஜின்பிங், உலக நாடுகள் சிலவற்றில் காணப்படும் துன்புறுத்தல் நடத்தையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
வட்டார ரீதியான உறவுகளை வலுப்படுத்துவதில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயலும் சீனா, திங்கட்கிழமை (செப்டம்பர் 1) ஐரோப்பிய, ஆசிய, யூரேசியத் தலைவர்களை ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் ஒன்றுகூட்டியது.
சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், கஸக்ஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலருஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு.
அமைப்பின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், பெலருஸ் அதிபர் அலெக்சண்டர் லுகாஷெங்கோ உள்ளிட்ட அனைத்துலக தலைவர்கள் பங்கேற்றனர்.அவர்களிடம், அனைத்துலக சூழல் இன்னும் குழப்பமானதாக மாறிவிட்டதாய் ஸி கூறினார்.
அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஒரு சில நாடுகளின் துன்புறுத்தல் நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஸி குறிப்பிட்டார்.
“உறுப்பு நாடுகள் எதிர்நோக்கும் பாதுகாப்பு மேம்பாட்டுப் பணிகள் இன்னும் சிக்கலானதாகியுள்ளது,” என்று டியன்ஜின் துறைமுகத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஸி சொன்னார்.
“கொந்தளிப்பையும் உருமாற்றத்தையும் கடந்துசெல்லும் உலகில் நாம் ஷாங்காய் உணர்வைத் தொடர்ந்து பின்பற்றவேண்டும். அமைப்பின் செயல்பாடுகளை இன்னும் திறம்பட மேற்கொள்ளவேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.