உக்ரைனில் தாக்குதலுக்காக தடை செய்யப்பட்ட 9M729 ஏவுகணையை பயன்படுத்தும் ரஷ்யா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் (INF Treaty) இருந்து வெளியேறக் காரணமாக இருந்த 9M729 க்ரூஸ் ஏவுகணையை (Cruise Missile) ரஷ்யா தற்போது உக்ரைனில் தாக்குதலுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக கியேவ் (Kyiv) அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே 1987ல் கையெழுத்திடப்பட்ட INF ஒப்பந்தம், தரைவழி ஏவுகணைகளின் வரம்பைக் கட்டுப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் பல பத்தாண்டுகளாக அணுசக்திப் பாதுகாப்பின் முக்கிய தூணாக இருந்தது.
ஆனால், 9M729 என்ற இந்த ஏவுகணை ஒப்பந்த விதிகளை மீறி ரகசியமாக உருவாக்கப்படுவதாகக் கூறித்தான், 2019ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றினார்.
ட்ரம்பின் அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், சமீப மாதங்களில் ரஷ்யா இந்த தடை செய்யப்பட்ட ஏவுகணையை உக்ரைனில் பலமுறை பயன்படுத்தியுள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர், ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரஷ்யா குறைந்தபட்சம் 23 தாக்குதல்களை இந்த 9M729 ஏவுகணையைக் கொண்டு நடத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஏவுகணையின் சிதைவுகள் மீட்கப்பட்டு 9M729 ஏவுகணை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர், “INF-ஆல் தடைசெய்யப்பட்ட 9M729 ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தியிருப்பது, அமெரிக்காவையும் ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் இராஜதந்திர முயற்சிகளையும் புடின் அவமதிக்கிறார் என்பதையே காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.





