உக்ரேனிய போரில் ரஷ்யா வெற்றி பெற்றுவிட்டது ; ஹங்கேரியின் பிரதமர் ஓர்பன்

உக்ரேனியப் போரில் ரஷ்யா வெற்றிபெற்றுவிட்டது என்று ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஆர்பன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் வெள்ளிக்கிழமை உச்சநிலை மாநாட்டில் சந்திக்கவிருக்கும் நிலையில் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
2010ஆம் ஆண்டு முதல் ஹங்கேரியின் பிரதமராகப் பணியாற்றும் ஆர்டன், ரஷ்யாவுடன் உறவுகளைப் பேணுவதுடன் உக்ரேனுக்கு ராணுவ உதவி வழங்குவதை எதிர்ப்பதால் ஐரோப்பியத் தலைவர்கள் சிலரின் குறைகூறலுக்கு ஆளாகியுள்ளார்மேலும், ஹங்கேரியில் பணவீக்கத்தால் ஏற்பட்ட பொருளியல் பாதிப்பைச் சீர்செய்ய அவரது அமைச்சரவை திணறி வருகிறது.
உக்ரேனுக்குத் தன் எதிர்காலத்தைத் தானே முடிவுசெய்யும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை அங்கீகரிக்காத ஒரே ஐரோப்பியத் தலைவர் ஆர்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘பேட்ரியட்’ யூடியூப் ஒளிவழிக்கு அளித்த நேர்காணலில், “உக்ரேனியர்கள் போரில் தோற்றுவிட்டனர். ரஷ்யா இந்தப் போரில் வெற்றிபெற்றுள்ளது,” என்று அவர் கூறினார்.உக்ரேனியர்களை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகள் எப்போது, எந்தச் சூழலில் இதை ஒப்புக்கொள்ளப் போகின்றன என்பதும் இதனால் என்ன விளையப்போகிறது என்பதும்தான் இப்போதைய கேள்விகள் என்றார் ஆர்டன்.
ரஷ்யாவிடமிருந்து எரிசக்தியை இறக்குமதி செய்யும் ஹங்கேரி உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்ப மறுத்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன் இடம்பெறுவதற்கும் அது பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ஐரோப்பிய, உக்ரேனியத் தலைவர்கள், புதன்கிழமை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் மெய்நிகர் சந்திப்பில் கலந்துரையாடவிருக்கின்றனர்.
ரஷ்ய அதிபரைத் டிரம்ப் சந்திப்பதற்குமுன் சண்டை நிறுத்தத்துக்காக உக்ரேனின் நலன்களைப் புறக்கணிப்பதால் ஏற்படக்கூடிய தீமைகளை அவர்கள் தெளிவுபடுத்த முனைந்துள்ளனர்.வெள்ளிக்கிழமை, அலாஸ்காவில் டிரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினைச் சந்தித்துப் பேசுவார்.
ரஷ்ய – உக்ரேனியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்க முயற்சிக்கு ஒத்துழைக்காததால் புட்டினைச் சாடிய டிரம்ப், கடந்த வாரம் உச்சநிலைச் சந்திப்புக்கு ஒப்புதல் தெரிவித்தார்.இவ்வேளையில், ஜெர்மானிய பிரதமர் ஏற்பாடு செய்துள்ள காணொளிச் சந்திப்பில் திரு டிரம்ப்புடன் உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, ஜெர்மனி, ஃபின்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, போலந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களும், நேட்டோ தலைமைச் செயலாளரும் கலந்துகொள்வர் என்று கூறப்பட்டது.