துருக்கியில் ரப்பர் படகு கவிழ்ந்து விபத்து – 14 புலம்பெயர்ந்தோர் மரணம்
துருக்கியின் (Turkey) தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஏஜியன் (Aegean) கடலில் 18 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஆப்கானிஸ்தான் நாட்டவர் உட்பட இருவர் உயிர் தப்பியுள்ளனர், மேலும் இருவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்லா (Muğla) மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான கடலோர நகரமான போட்ரமில் (Bodrum) இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
போட்ரமுக்கு அருகில் அமைந்துள்ள கிரேக்க தீவான கோஸை (Kos) அடைய புலம்பெயர்ந்தோர் முயற்சி செய்த போது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.





