ரோஹித் சர்மா படைத்த புதிய சாதனை!
டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்த போட்டியில் சிற்பபாக விளையாடிய ரோஹித் சர்மா 41 பந்துக்கு 92 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் ரோஹித் சர்மா கைப்பற்றி இருந்தார். மேலும், இந்த வெற்றியின் மூலமாகவும் அவர் அடித்த 92 ரன்கள் மூலமாகவும் பல சாதனைகள் படைத்திருந்தார். அது என்ன சாதனைகள் என்று தற்போது பார்க்கலாம்.
ரோஹித் சர்மா, நேற்று 8 சிக்ஸர்களை அடித்திருப்பார், இதன் மூலம் டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் ஆனார். இவர் இதுவரை 157 டி20 போட்டிகளில் விளையாடி 149 இன்னிங்ஸ்களில் 203 சிக்சர்களை அடித்துள்ளார்.
மேலும், இந்த 8 சிக்ஸர்கள் மூலம் இந்தியா அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் 17 ஆண்டுகால டி20 உலகக் கோப்பை சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, கடந்த 2007ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து போட்டியில் 7 சிக்ஸர்களை யுவராஜ் சிங் நடித்திருப்பார். ஆனால், ரோஹித் சர்மா நேற்று நடந்த போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார். இதன் மூலம் ஒரு போட்டியில் இந்திய வீரர் ஒருவரால் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த உலக சாதனையை ரோஹித் தற்போது படைத்துள்ளார். இவர் இதுவரை மொத்தம் 4,165 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக பாகிஸ்தான் வீரரான பாபர் அசாம் 4,145 ரன்களுடன் 2-வது இடத்திலும், விராட் கோலி 4,103 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
டி20 உலகக் கோப்பையின் ஒரே சீசனில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா தற்போது பெற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு மற்றும் 2014 ம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ஐந்து வெற்றிகளின் எம்எஸ் தோனியின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் வெற்றி பெற்றதன் மூலம் இதுவரை விளையாடிய 60 டி20 போட்டிகளில் ஒரு கேப்டனாக ரோஹித்தின் 48 வெற்றிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் டி20 போட்டிகளில் சிறந்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த படியாக பாகிஸ்தானின் கேப்டனாக பாபர் அசாம் 85 டி20 போட்டிகளில் விளையாடி அதில் 48 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்றைய போட்டியில் 92 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் ஆனார். அவர் 6 போட்டிகளில் 197 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக டேவிட் வார்னர் 5 போட்டிகளில் 166 ரன்களுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் (8 சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். இவருக்கு அடுத்த கிறிஸ் கெய்ல் மற்றும் ஸ்காட்லாந்தின் பிராண்டன் மெக்முல்லனின் தலா 6 சிக்ஸர்களின் சாதனையை முறியடைத்துள்ளார்.
ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 80 போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20ஐ சேர்த்து) 132 சிக்ஸர்களை அடித்துள்ளார், இது சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் அதிக சிக்ஸர்களை அடித்த சாதனையாகும். இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் கெய்லின் 130 சிக்சர்கள் அடித்த சாதனையை முறியடித்துள்ளார்.
ரோஹித் நேற்று 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தது டி20 உலகக் கோப்பையில் அவரது தனிப்பட்ட சிறந்த ஸ்கோராகும். டி20 உலகக் கோப்பையில் ஒரு இந்திய வீரரின் 2-வது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும் (இவருக்கு முன் சுரேஷ் ரெய்னாவின் 101 ரன்களுடன் முன்னிலையில் உள்ளார்).மேலும், டி20யில் ஒரு கேப்டனின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். (அதிலும் இவருக்கு முன் 98 ரன்களுடன் க்றிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்).