ஏவப்பட்ட 30 வினாடிகளில் கீழே விழுந்த ரொக்கெட் – பிரேசிலுக்கு மற்றுமோர் பின்னடைவு!
பிரேசிலின் அல்காண்டரா (Alcantara) விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட வணிக ரொக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியதை தொடர்ந்து அந்நாட்டின் விண்வெளி இலட்சியங்களில் குறிப்பிடத்தக்க பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய நிறுவனமான இன்னோஸ்பேஸால் (Innospace) இயக்கப்பட்ட இந்த ரொக்கெட் பறந்து சென்ற 30 வினாடிகளில் செயலிழப்பை சந்தித்து, முன்னரே நியமிக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்திற்குள் விழுந்தது.
இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும் பிரேசிலின் விண்வெளி கனவு திட்டத்தில் குறிப்பிட்ட சரிவு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து இன்னோஸ்பேஸ் (Innospace ) தலைமை நிர்வாக அதிகாரி கிம் சூ-ஜாங் (Kim Soo-jong ) பங்குதாரர்களிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பத்தால் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 29% சரிவை சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த முயற்சி அடுத்த ஆண்டிலும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு அல்காண்டராவில் நடந்த ஒரு ரொக்கெட் வெடிப்பில் 21 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரேசிலின் விண்வெளித் திட்டம் தாமதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





