Video call meeting பேசுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
அதிகமாக வீடியோ கால் மீட்டிங் பேசுபவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வீடியோ கால் என்ற ஒன்று கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அதிகரித்துவிட்டதை நாம் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக வேலை நிமித்தமான வீடியோ கால் மீட்டிங் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இத்தகைய மீட்டிங் மேற்கொள்வதற்கு கூகுள் மீட், ஜூம், மைக்ரோசாப்ட் டீம் செயலிகள் பயன்படுத்தப்படுகிறது.
வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் இதுபோன்ற செயல்களில் நாள் முழுவதும் வீடியோ கால் பேசும் சூழல் கூட ஏற்படுகிறது. இதனால் அவர்களின் உடல்நிலையும் மனநிலையும் அதிகம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகமாக வீடியோ கால் பேசுவதால் ஏற்படும் சோர்வை Zoom சோர்வு என அழைக்கிறார்கள்.
இதனால் ஊழியர்களின் மூளை மற்றும் இதயம் பாதிக்கப்படுவதாக அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்ள 35 பல்கலைக்கழக மாணவர்களை தேர்வு செய்து அவர்களை 50 நிமிடம் வீடியோ கால் மீட்டிங் செய்ய வைத்தார்கள்.
ஆனால் இதில் பங்குபெற்ற மாணவர்கள் 30 நிமிடங்களுக்குள்ளாகவே தங்களுக்கு இடைவேளை வேண்டும் எனக் கேட்டு வெளியேறியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் உண்மை தன்மையை தெரிந்துகொள்ள அதில் பங்கேற்ற மாணவர்களில் 18 பேரை நேரடியாக உரை நிகழ்த்தும் இடத்திலேயே கலந்து கொள்ள வைத்தார்கள்.
இதன் முடிவில் நேரடியாக அதில் கலந்து கொண்டவர்களை விட 50 நிமிட வீடியோ கால் வழியாக கலந்து கொண்ட மாணவர்கள் அதிக சோர்வடைந்ததாக ஆய்வாளர்கள் கட்டறிந்தனர்.
“நம்மால் நேரில் பேச முடியாத நபர்களிடம் இணையம் வழியாக பேசும் தளமாக மட்டுமே இந்த செயலிகளை பார்க்க வேண்டும் என்றும், அதை விடுத்து எல்லாவற்றிற்கும் இதையே பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும்” என இந்த ஆய்வை நடத்திய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
அதிக நேரம் வீடியோ கால் பேசுவதால் ஏற்படும் சோர்வானது உடலுக்கும் மனதுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறும் அவர், இதிலிருந்து விடுபட வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சிலர் இந்த ஆய்வு குறைவான நபர்களிடம் நடத்தப்பட்டதால் இந்த முடிவுகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறினாலும், வீடியோ கால் மீட்டிங் செயலிகளால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.
இவற்றால் நீண்ட காலம் வீடியோ கால் மீட்டிங்கில் பங்கேற்கும் ஊழியர்களின் மனநிலையில் பெரிய தாக்கம் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.