உலக மக்களின் வேலைகள் பறிபோகும் அபாயம் – தொழில்நுட்ப வளர்ச்சியால் நெருக்கடி
அரை நூற்றாண்டுக்குமுன்னால் இது வெறும் கற்பனை, அல்லது, சுவையான அறிவியல் புனைகதை. ஆனால் இன்றைக்கு, தொழில்நுட்பம் இந்த நிஜத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது.
உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் ஓட்டுநர் இல்லாத காரை உருவாக்க முனைந்துகொண்டிருக்கின்றன, அதில் பெரிய அளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. விரைவில் நம் தெருக்களிலும் கார்கள் தானாக விரைந்தோடும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
கார் எப்படித் தானாக ஓடும் என்கிற கேள்வியைச் சற்று மறந்துவிடுங்கள். இப்போது நாம் பேசப்போகும் கேள்வி சற்று வேறுவிதமானது: அப்படிக் கார் தானாக ஓடத் தொடங்கினால், இதுவரை கார் ஓட்டுநர்களாக இருந்தவர்களுடைய நிலைமை என்ன ஆகும்? அவர்கள் வேலையை இழந்து வீட்டுக்குப் போகவேண்டியதுதானா?
இந்தக் கேள்வி கார்களுக்குமட்டுமானது இல்லை. ஒருகாலத்தில் தொழிற்சாலைகளில் மனிதர்கள் செய்துகொண்டிருந்த பல வேலைகளை இப்போது ரோபோக்கள் (இயந்திர மனிதர்கள்) செய்யத் தொடங்கிவிட்டன. முன்பெல்லாம் தொலைபேசியில் ஒரு நிறுவனத்தை அழைத்தால் யாராவது ஒரு மனிதர்தான் எடுத்துப் பேசுவார். ஆனால், இப்போது நிறுவனங்கள் அந்த வேலையை மென்பொருள்களிடம் ஒப்படைத்துவிட்டன. இதுபோன்ற மாற்றங்களை ஒவ்வொரு துறையிலும் பார்க்கமுடிகிறது.
இதை நிறுவனங்களின் கோணத்தில் பார்த்தால், மனிதர்களுடன் ஒப்பிடும்போது இயந்திரமோ மென்பொருளோ இருபத்து நான்கு மணிநேரமும் உழைக்கும், சொன்ன வேலையைக் கேட்கும், வம்பு, அரசியல் செய்யாது, பதவி உயர்வு கேட்காது, பக்கத்து நிறுவனத்தில் அதிகச் சம்பளம் தருகிறார்கள் என்று தாவிக் குதிக்காது… முக்கியமாக, மனிதர்களைவிடப் பலமடங்கு விரைவாகவும் துல்லியமாகவும் வலிமையுடனும் இவற்றால் செயல்படமுடியும். அதனால், குறைந்த முதலீட்டில் அதிக உழைப்பைப் பெற்று நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கலாம் என்று நிறுவனர்கள் நினைக்கிறார்கள்.
இதனால், கணினிகள், தொலைதொடர்பு, இணையம், இயந்திர மனிதர்கள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் சேவைகள் எல்லாம் சேர்ந்து, மனிதர்கள் செய்துகொண்டிருந்த பல வேலைகளை நாளைக்கு இயந்திரங்கள் செய்யத் தொடங்கிவிடும் என்கிறார்கள். அப்படியானால், அந்த உலகில் மனிதர்களுக்கு என்னதான் வேலை மீதியிருக்கும்?
இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டிய முதன்மையான வேறுபாடு, முற்றிலும் ஒரேமாதிரியான, திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய வேலைகளைத்தான் இயந்திரங்கள் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இப்போதே நாம் அந்த வேலைகளை ‘இயந்திரத்தனமானவை’ என்றுதான் சொல்கிறோம். அதனால், அவை இயந்திரங்களிடம் செல்வதைப்பற்றி நாம் வியப்படையக்கூடாது.
இன்னொருபக்கம், படைப்பூக்கம் தேவைப்படுகிற பல வேலைகள் இருக்கின்றன. அவற்றை இயந்திரங்களால் செய்யமுடியாது. ஒருவேளை செய்தாலும், அவை எதார்த்தத் தேவைகளை மனிதர்களைப்போல் புரிந்துகொண்டு வேண்டிய மாற்றங்களைச் செய்யாது.
அதனால், மனிதர்கள் இயந்திரங்களைத் தங்களுடைய வேலையைப் பறிக்க வந்த எதிரிகளைப்போல் பார்க்காமல், தங்களுடைய வேலையின் இயந்திரத்தனமான பகுதிகளை நீக்கிவிட்டுப் படைப்பூக்கத்துடன் சிந்திப்பதற்கு நேரத்தைப் பெற்றுக்கொடுக்கும் தோழர்களாகப் பார்க்கலாம். அதாவது, இந்தப் புதிய இயந்திரங்களை, மென்பொருட்களை நம் தோழர்களாக்கிக்கொள்ளவேண்டும், அவற்றைப் பயன்படுத்தப் பழகவேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒருவருக்குக் கடன் தரலாமா, கூடாதா என்று தீர்மானிக்கிற வங்கி அலுவலர் ஒருவர் இருக்கிறார். அவர் அந்த நபருடைய தகவல்களை அலசி ஆராய்ந்து, அவரைப்பற்றிய முழுமையான தகவல்களைப் புரிந்துகொண்டு, அவரைப்போன்ற பிறர் வங்கிக் கடனை ஒழுங்காகத் திருப்பிக் கட்டினார்களா என்று ஆவணங்களைப் பார்த்துப் புரிந்துகொள்வதற்கு ஓரிரு நாட்களாகலாம். ஆனால், இதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள் ஒன்று இவற்றை அரை நொடியில் செய்து அவருக்குக் கொடுத்துவிடும். அவர் இந்தக் குறிப்புகளைப் பார்த்துத் தன்னுடைய தீர்மானத்தை விரைவாக எடுக்கலாம். இதன்மூலம் அவர் தன் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யலாம்.
சுருக்கமாகச் சொன்னால், நாளைய உலகில் மேலும் மேலும் வேலைகள் இயந்திரங்களிடம் செல்லும். ஆனால், அதன்மூலம் மனிதர்களுடைய வேலைகள் பறிபோய்விடாது, அவை மாற்றத்துக்குள்ளாகும், அவ்வளவுதான். இந்த இயந்திரங்களை நன்கு பயன்படுத்திக்கொள்கிற மனிதர்கள் விரைந்து முன்னேறுவார்கள்.