இலங்கையில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் சரியும் விற்பனை : விலை குறைப்பு சாத்தியமாகுமா?
இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் விற்பனையாளர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்வதாகவும் அதனை தீர்ப்பதற்க்கு புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இலங்கையில் தற்போது 22 கரட் தங்கமானது 192,400 ஆக பதிவாகியுள்ளது. செய்கூலி மற்றும் சேதாரங்களை பொருத்து ஆபரண தங்கத்தின் விலை இதில் இருந்து மாறுப்படும்.
இந்நிலையில் உள்ளூர் நகை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் தங்கள் உலகளாவிய போட்டித்தன்மையை பலவீனப்படுத்திய சிக்கலான ஒழுங்குமுறை கட்டமைப்புடன் போராடி வருகின்றனர்.
ஆகஸ்ட் 2024 இல் முடிவடைந்த முதல் எட்டு மாதங்களில், இந்தத் துறையின் ஒட்டுமொத்த வருவாய் 214.31 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, ஏற்றுமதி செயல்திறனில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 18.69 சதவீதம் சரிவாகும்.
அமுலுக்கு வந்த அதிக வரிகள் போன்ற பல கொள்கை மாற்றங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் புதிய வரிக் கொள்கையின் காரணமாக தங்கத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அடகு வைக்கப்பட்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட பழைய நகைகளை வைத்து புதிய ஆபரணங்கள் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, SLGJA ஆனது நிலையான கொள்கைகள், வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் முழு ரத்தினம் மற்றும் ஆபரணத் தொழிலுக்கு ஆதரவாக அதிகாரிகளிடமிருந்து அதிக ஒத்துழைப்பைத் தொடர்ந்து பரிந்துரைக்கிறது.