ஒரேநேரத்தில் பல வகையான புற்றுநோய்களைக் கண்டறியக்கூடிய இரத்தப் பரிசோதனை குறித்து ஆய்வாளர்கள் கருத்து!
ஒரேநேரத்தில் 50 க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்களைக் கண்டறியக்கூடிய இரத்தப் பரிசோதனையானது வெற்றிகரமாக உருவாக்கப்பட்டால் நோயறிதலை கண்டறிதல் மிகவும் இலகுவானதாக இருக்கும் என்றும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமான ஆயிரக்கணக்கான NHS நோயாளிகளை உள்ளடக்கிய சோதனையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.
சோதனையில் இங்கிலாந்து அல்லது வேல்ஸில் உள்ள 6,238 பேர் கலந்துக்கொண்டதுடன், அவர்களில் 323 பேருக்கு புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 244 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மொத்தத்தில், இரத்த ஓட்டத்தில் சுற்றும் கட்டி டிஎன்ஏவின் துண்டுகளை கண்டறியும் சோதனை 66 வீதம் புற்றுநோயை சரியாக கண்டறிந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த முறை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டால், மக்கள் உடனடி சிகிச்சையைப் பெறுவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.