மியான்மர் சைபர் கிரைம் முகாமில் இருந்த மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மியான்மரில் “சைபர் முகாமில்” மோசடியான சைபர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றச் செயல்களுக்கு பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 08 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய இலங்கையர்கள் குழுவில் ஆறு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் மேம்பட்ட வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றிய இவர்களை குறித்த முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இலங்கை அரசின் வேண்டுகோளின் பேரில் கடந்த 4ம் திகதி மியான்மர் அதிகாரிகள் இக்குழுவை முகாமில் இருந்து விடுவித்துள்ளனர்.
அதன்படி தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்தின் “மசோட்” எல்லை வாசலில் இந்த இலங்கையர்களை பொறுப்பில் எடுத்தனர்.
இந்நிலையில் குறித்த அனைவரும் இன்று காலை 09.50 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு, சர்வதேச குடியேற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்கள் இணைந்து இவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.