தாக்குதலை குறைத்திடுங்கள் – இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா கூட தற்போது அதிக அளவிலான காசா நகரத்து பொதுமக்களின் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு போரை நிறுத்த வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், காசா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான குண்டுவீச்சு தாக்குதல், அதனால் ஏற்படும் பொதுமக்கள் உயிரிழப்புகள் காரணமாக உலகளாவிய ஆதரவை இஸ்ரேல் இழக்க நேரிடும் என்றும், ஹமாஸை அழிக்க வேண்டியது முக்கியம் தான். இருந்தாலும் பொதுமக்கள் உயிரிழப்பை கருத்தில் கொண்டு போரின் தாக்கத்தை இஸ்ரேல் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை அழிக்கும் வரையில் இந்த போர் ஓயாது. சர்வதேச ஆதரவுகள் இருந்தாலும், இல்லை என்றாலும் ஹமாஸுக்கு எதிரான போர் தாக்குதல்கள் தொடரும் என திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
அண்மையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இஸ்ரேல் – ஹமாஸ் போர் பற்றி விவாதித்தார். அப்போது பொதுமக்கள் உயிரிழப்பை கருத்தில் கொண்டு வரும்காலத்தில் போரின் தாக்கத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா சார்பில் மேலும் வெளியான செய்தி குறிப்பில், இஸ்ரேல் தங்களை தற்காத்துக் கொள்ள ஹமாஸ் மீதான போரை வலுவாக நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையானது பாலஸ்தீனத்தில் பெருகிவரும் பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கிடையே பிளவை ஏற்படுத்திவிடும். என்றும் இஸ்ரேல் உடனான பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா செய்தி வெளியிட்டுள்ளது.
வாஷிங்டனுக்கு அருகிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டதற்கு பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதில் இஸ்ரேல் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதே நேரத்தில் ஹமாஸ் நடவடிக்கைகளை பின்தொடர்வதை நிறுத்தாமல் கவனமாக தொடருங்கள் என்றும் தெரிவித்தார்.