ஜப்பானில் 100 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையில் சாதனை உயர்வு! பெரும்பாலோர் பெண்கள்

ஜப்பானில் 100 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தற்போதைய கணக்கெடுப்பிற்கமைய,குறைந்தது 99,800 பேர் 100 வயதிற்கும் மேல் வாழ்ந்து வருகிறார்கள். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4,600 பேர் அதிகமாகும்.
அதாவது 5% உயர்வு ஆகும். இந்த மூத்த குடிமக்களில் சுமார் 88% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஒவ்வொரு 100,000 மக்களுக்கு 80 பேர் நூறு வயதிற்கும் மேற்பட்டவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் தற்போது வாழும் மூத்த நபர் ஷிகேகோ ககாவா என்ற பெண் ஆவார். இவர் சுமார் 80 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றியவர். உலகளவில் அதிக வயதுடையவர் எதல் கேடர்ஹாம் என்பவராகும். 116 வயதான அவர் பிரித்தானியாவை பூர்வீகம் கொண்டவராகும்..
இதேவேளை, ஜப்பானில் மக்கள் தொகை குறையும் நிலையில், மூத்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பது புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ சேவைகள், பராமரிப்பு வசதிகள் ஆகியவற்றுக்கான செலவுகள் உயரும் நிலையில், அவற்றை மேற்கொள்வதற்கான பணியாளர் தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும், ஜப்பானின் மக்கள்தொகையில் 900,000 பேர் குறைந்தது, இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.