கனடியர்களுக்கு மீண்டும் விசா – இந்தியா அறிவிப்பு
இந்தியா கனடியர்களுக்கு மீண்டும் விசா வழங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று இதனை தெரிவித்துள்ளது. அந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
கனடியச் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சென்ற ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கக்கூடும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சென்ற மாதம் கூறியிருந்தார்.
இந்தியா அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. சீக்கியத் தலைவர் கொல்லப்பட்டது குறித்த விசாரணையில் ஒத்துழைக்குமாறு கனடா இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது.
கனடாவும் இந்தியாவும் தத்தம் நாட்டிலுள்ள தூதர்களை வெளியேற்றின. இந்தியா கனடியக் குடிமக்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பூசலின் காரணமாகச் சென்ற வாரம் கனடா இந்தியாவிலிருந்து 41 அரசதந்திரிகளை மீட்டுக்கொண்டது.