ரணில் -சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது.
2026 ஜனவரி முற்பகுதியளவில் மேற்படி சந்திப்பு நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (31) நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன Ruwan Wijewardene, சிரேஸ்ட உப தலைவர்களான அகில விராஜ் காரியவசம் Akila Viraj Kariyawasam, நவீன் திஸாநாயக்க Naveen Dissanayake ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது இரு தரப்பு இணைவு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.
இரு தரப்பு இணைவு குறித்த பேச்சுகளின்போது அரசியல் சதிகளுக்கு இடமளிக்காது, வெளிப்படை தன்மையுடன் செயல்பட இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
அதேபோல ரணில் மற்றும் சஜித்துக்கிடையிலான நேரடி சந்திப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் ஜனவரி முற்பகுதியில் சந்தித்து பேச்சு நடத்திய பின்னரே இணைவு குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.





