ரணிலுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அவசியம் – 5 சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் 5 சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து நேற்று மதியம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அவரது உடல்நிலை திருப்திகரமாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
இதுபோன்ற பின்னணியில், அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவ பரிந்துரையில் கூறப்பட்டால், அவரை வெளியே அழைத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஜனாதிபதி காலத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் தனது மனைவி கலந்து கொண்டது தொடர்பான விசாரணை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார்.