பஞ்சாப் வெள்ளம்: ஒரு மாதத்தில் 29 பேர் பலி, 2.5 லட்சம் பேர் பாதிப்பு

வட மாநிலங்களில் பருவ மழையின் கோரத் தாண்டவம் நீடித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துவிட்டனர். ஏறக்குறைய 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாள்களாக இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.
இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் கனமழை நீடித்து வருகிறது.
சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், குருதாஸ்பூர், பதான்கோட், பாசில்கா, கபுர்தலா, பெரோஸ்பூர், ஹோஷியார்பூர் உள்ளிட்ட கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 3 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப்பில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பில் இதுவரை 29 பேர் உயிரிழந்துவிட்டனர். அதிகபட்சமாக, பதான்கோட் மாவட்டத்தில் 2.56 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 15,688 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சீன சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி, உடனடியாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானைத் தொடர்புகொண்டு, வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.