ஐபிஎல் தொடரால் கிடைத்த இலாபம் – பணமழையில் பிசிசிஐ!
இந்தியாவில் கிரிக்கெட் தொடர் அதிகமானாரோல் பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட்டை பார்க்கின்றனர்.
அதேபோலவே, மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டில்தான் அதிக வியாபாரமும் நடக்கிறது. குறிப்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் அதிக வருவாயை ஈட்டும் விளையாட்டு வாரியமாக திகழ்கிறது.
அதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர். உலகம் முழுவதும் டி20 லீக்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், அதில் நம்பர் 1 டி20 லீக்காக ஐபிஎல் திகழ்கிறது.
அந்த வகையில், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சுமார் ரூ. 5,120 கோடி உபரியாக கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரூ. 2, 367 கோடியை பிசிசிஐ உபரியாக பெற்றதாகவும், ஓராண்டில் உபரி மட்டும் 116 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 2023ஆம் ஆண்டில் மட்டும் ஐபிஎல் தொடரால் கிடைத்த மொத்த வருவாய் ரூ.11,769 கோடி ஆகும். இது ஆண்டு வளர்ச்சி விகிதம் 78 ஆக உள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடரின் புதிய ஊடக உரிமை மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவைதான்…. 2023-27ஆம் ஆண்டு வரை புதிய ஊடக உரிமை மட்டும் ரூ. 48 ஆயிரத்து 390 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது.
டிஸ்னி ஸ்டார் நிறுவனம் 2023-27 வரை ஐபிஎல் தொலைக்காட்சிஉரிமையை ரூ.23 ஆயிரத்து 575 கோடிக்கு பெற்றது. அதேபோல், டிஜிட்டல் உரிமத்தை ஜியோ சினிமா ரூ. 23 ஆயிரத்து 758 கோடிக்கு பெற்றது. ஐபிஎல் டைட்டில் உரிமத்தை டாடா சன்ஸ் மொத்தம் ரூ. 2500 கோடி கொடுத்து தனதாக்கினர்.