2026 பொருளாதார இலக்கு குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
புதிய திட்டங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றி 2026 ஆம் ஆண்டில் நாட்டை பொருளாதார ரீதியில் வெற்றிக்கு இட்டுச்செல்ல அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake அழைப்பு விடுத்தார்.
இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று இலங்கை சுங்கத்திணைக்களத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
சுங்கப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
மேலும், நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் பிரதான நிறுவனமான இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை செயற்திறனாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சிக்கு நாட்டுக்கு தேவையான வருமானம் கிடைக்காமை மற்றும் நாட்டுக்கு அவசியமான டொலர்கள் கிடைக்காமை ஆகியவையே பிரதான காரணம் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
வருமானம் சேகரிப்பு, வர்த்தகத்தை இலகுபடுத்தல், சமூக பாதுகாப்பு மற்றும் நிறுவன அபிவிருத்தி ஆகிய 04 பிரிவுகளின் கீழ் இலங்கை சுங்கத் திணைக்களம் செயல்படுகின்றது. அந்தந்த பிரிவுகளின் முன்னேற்றம் குறித்து இதன் போது ஜனாதிபதி கேட்டறிந்தார்.
மேலும், இலங்கை சுங்கத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக 2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து ஜனாதிபதிக்கு அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.
பணியாளர் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, பயிற்சி மற்றும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.





