சீன-ஆப்பிரிக்க உறவுகளை மேம்படுத்த அழைப்பு விடுத்துள்ள அதிபர் ஸி ஜின்பிங்
சீன அதிபர் ஸி ஜின்பிங், ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கூடுதலாக 360 பில்லியன் யுவான் நிதியுதவி வழங்க உறுதியளித்துள்ளார்.
உள்கட்டமைப்பு முதல் பாதுகாப்பு ஒத்துழைப்பு வரையிலான பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த முனைந்துள்ளது பெய்ஜிங்.அதன் தொடர்பில் மூன்று நாள் உச்சநிலை மாநாட்டை அது ஏற்று நடத்துகிறது. அதிபர் ஸி, செனகல் அதிபர் பாசிரோ டியோமயே ஃபாயே இருவரும் கூட்டாக அதற்குத் தலைமையேற்றுள்ளனர்.
செப்டம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர், இருதரப்பு உறவுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
“சீனாவும் ஆப்பிரிக்காவும் சேர்ந்து உலகின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கின்றன. நாம் நவீனமயமாகாவிட்டால் உலகளாவிய நவீனமயமாதல் சாத்தியமாகாது,” என்று அதிபர் ஸி கூறினார்.சீனா அடுத்த மூவாண்டுகளில் ஆப்பிரிக்காவிற்கு நிதியுதவியாக 360 பில்லியன் யுவானை வழங்கும் என்றார் அவர்.
செப்டம்பர் 3ஆம் திகதி அவர் நைஜீரிய அதிபர் போலா டினுபுவைச் சந்தித்துப் பேசினார். நிலக்கடலை உட்படக் கூடுதலான நைஜீரியப் பொருள்களைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய இருதரப்பும் இணக்கம் கண்டன.
செப்டம்பர் 2ஆம் திகதி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசாவும் சீன அதிபர் ஸியும் சந்தித்தனர். ‘பெய்டு இருப்பிடம் காட்டும் செயற்கைக்கோள் கட்டமைப்பு’ தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியை அவர்கள் பார்வையிட்டனர்.