பிரான்ஸில் சமூக இணையத் தளங்களை கட்டுப்படுத்த திட்டமிடும் ஜனாதிபதி!
பிரான்ஸில் மற்றொரு முறை கலவரம் கட்டுமீறிப் பரவுகின்ற நிலைமை உருவானால் சமூக இணையத் தளங்களை ஒழுங்குபடுத்தவோ அல்லது துண்டிக்கவோ வேண்டிவரலாம் என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சமூக இணைய ஊடகங்கள் அழிவுச் செயல்களுக்காக ஆட்களைத் திரட்டவும் கொலை செய்வதற்கும் ஒரு கருவியாக மாறுவது உண்மையிலேயே ஒரு பெரும் பிரச்சினை ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நகர மேயர்களுடன் நடத்திய சந்திப்பில் இவ்வாறு எச்சரித்திருக்கிறார். அரசுத் தலைமையின் இந்த அறிவிப்புக்குப் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
வலது, இடதுசாரிக் கட்சிகளது தரப்பில் இருந்தும் ஆளும் கட்சிக்குள் இருந்தும் மக்ரோனின் இந்த முடிவை விமர்சித்துக் கடும் ஆட்சேபக் கருத்துக்கள் கிளம்பியுள்ளன.
நொந்தேர் நகரில் 17 வயது இளைஞன் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுடப்பட்ட சம்பவம் நாட்டைப் பெரும் வன்முறைக் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புறங்களில் தெருக்களில் திரண்ட இளவயதினர் மிக மூர்க்கத்தனமாகப் புரிந்த அடாவடிகள் வன்செயல்கள், தீவைப்பு உலகைப் பெரும் வியப்புக்குள்ளாக்கியிருந்தது. காருக்குள் வைத்து இளைஞன் சுடப்பட்ட சமயத்தில் அந்த இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோக் காட்சிப் பதிவு சிறிது நேர இடைவெளிக்குள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதே பொலீஸாருக்கு எதிரான வன்செயல்கள் சடுதியாக வெடித்தமைக்குக் முதல் காரணம் என்று சொல்லப்படுகிறது.