தென் கொரியாவில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் ஜனாதிபதி – விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
தென் கொரியாவில் அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் ஜனாதிபதி Yoon Suk Yeol விசாரணைக்கு ஒத்துழைக்க மீண்டும் மறுத்துள்ளார்.
அதிகாரிகளின் உத்தரவை மீறியுள்ள அவர் மூன்றாவது நாளாகத் தடுப்புக் காவலில் உள்ளார்.
அவரது தடுப்புக் காவலை நீட்டிக்கும்படி நீதிமன்றத்திடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரு யூன் மற்றொரு விசாரணைக்கு முன்வரப்போவதில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முதல் நாளிலேயே தமது நிலைப்பாட்டைத் திரு யூன் கூறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் நடந்த 10 மணி நேர விசாரணையில் யூன் மௌனம் சாதித்தார்.
கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் சொல்ல அவசியமில்லை என்று அவர் கருதுவதாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார். யூனை விசாரிப்பதற்குத் தரப்பட்ட 48 மணி நேர அவகாசம் இன்று காலையுடன் முடிந்திருக்கவேண்டும்.
ஆனால், நீதிமன்றம் யூனின் கைது குறித்து மறுஆய்வு செய்வதை முன்னிட்டு அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, அதிபரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பாதுகாப்புச் சேவைக்கான தற்காலிகத் தலைவர் கிம் சியொங் ஹோனை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.