பிரித்தானியாவில் வீதி குழி இழப்பீட்டு கோரிக்கைகள் 90% அதிகரிப்பு
பிரித்தானியாவில் உள்ள கவுன்சில்களில் வீதியில் உள்ள குழிகள் தொடர்பான இழப்பீட்டு கோரிக்கைகள் பெரிதும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
RAC மோட்டார் வாகனக் குழுவின் பகுப்பாய்வின்படி, 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையே இழப்பீட்டு கோரிக்கைகள் சுமார் 90 சதவீதம் அதிகரித்துள்ளன.
2024 ஆம் ஆண்டில், வாகன சாரதிகளால் கோரப்பட்ட 53,000 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில், சிலவற்றுக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2021 ஆம் ஆண்டில் இதே கோரிக்கைகள் 27 ஆயிரத்து 731 ஆக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வீதி பராமரிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
கவுன்சில்கள் குழிகளை வகைப்படுத்த பல விதமான அளவுகோல்களைப் பயன்படுத்துவதாக RAC கொள்கைத் தலைவர் சைமன் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில், பிரித்தானிய அரசு வீதிகளை மேம்படுத்த £7.3 பில்லியன் முதலீடு செய்யவுள்ளது.
இதன் மூலம், கவுன்சில்கள் குழிகள் உருவாவதற்கு முன் பராமரிப்பு செய்யும் வாய்ப்பு பெறுவார்கள்.
இது வாகன ஓட்டுநர்களுக்கும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கும் மற்றும் பாதசாரிகளுக்கும் வீதி பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கை என நிபுணர்கள் கூறுகின்றனர்.





