நாய்க்கறிக்கு தடை விதிக்கவுள்ள பிரபல ஆசிய நாடு
கலாச்சாரத்தின் ஒருபகுதியாக நாய் மாமிசம் சாப்பிட்டு வந்த தென் கொரியா தற்போது விலங்கு நல ஆர்வலர்களின் கடும் விமர்சனத்தை அடுத்து முக்கிய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் நாய் மாமிசம் உண்ணும் பழக்கம் வெளிநாடுகளில் விமர்சனங்களை ஈர்த்துள்ளதுடன், இளம் தலைமுறையினரால் உள்ளூரிலும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
இந்த நிலையில், ஆளும் மக்கள் சக்தி கட்சியின் கொள்கைத் தலைவரான Yu Eui-dong தெரிவிக்கையில், நாய் மாமிசம் உண்பது தொடர்பான சமூக மோதல்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டிய நேரம் இது என்றார்.மேலும், அரசாங்கமும் ஆளும் கட்சியும் இந்த ஆண்டு தடை விதிப்பை அமல்படுத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தென் கொரியாவில் நாய் மாமிசம் உண்ணும் வழக்கத்தை கைவிட நாட்டின் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர்.
மட்டுமின்றி, தெரு நாய்க்களை தத்தெடுக்கவும் செய்தனர். நாய் மாமிசம் தடைக்கு முன்னர் பலமுறை முயன்றும், இந்த தொழிலில் ஈடுபடுபவர்களால் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, மசோதாக்கள் நிறைவேறாமல் போனது.மட்டுமின்றி, நாய் மாமிச விற்பனையை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகள் மற்றும் உணவக உரிமையாளர்களின் பிழைப்பு தொடர்பிலும் கவலை தெரிவிக்கப்பட்டது.தற்போது தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், வர்த்தகத்தில் இருந்து வெளியேற வணிகங்களுக்கு மூன்று ஆண்டு சலுகைக் காலம் மற்றும் நிதி உதவியும் அளிக்கப்பட உள்ளது.
கொரிய தீபகற்பத்தில் நாய் மாமிசம் உண்பது பழமையான ஒரு நடைமுறையாகும், கோடை வெப்பத்தை தணிக்க ஒரு வழியாக மக்கள் நாய் மாமிசம் சாப்பிட்டு வந்துள்ளனர். இளம் தலைமுறையினர் தற்போது இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை என்ற போதும், வயதானவர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.அத்துடன் குறிப்பிட்ட சில உணவகங்களிலும் மக்களுக்கு பரிமாறப்படுகிறது. தென் கொரியாவில் 1,150 நாய் வளர்ப்பு பண்ணைகளும் 34 நாய் மாமிச மையங்களும் 219 நாய் மாமிச விநியோக நிறுவனங்களும் 1,600 உணவகங்களில் நாய் மாமிசம் பரிமாறவும் செய்கின்றனர்.
இந்த நிலையில், தென் கொரிய மக்கள் 64 சதவீதம் பேர்கள் தற்போது நாய் மாமிசத்தை தடை விதிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.