15 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு புனிதர் பட்டம் வழங்கிய போப் லியோ

வாடிகனை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவத்தில், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும் நபர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள். மண்ணில் சாதாரண மக்களாக பிறந்து இறைவனுக்கு உகந்த வகையிலும், பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்த மக்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
அந்தவகையில் இங்கிலாந்தில் கடந்த 1991-ம் ஆண்டு பிறந்து பின்னர் இத்தாலியில் குடிபெயர்ந்து 2006-ம் ஆண்டு ரத்தப் புற்றுநோயால் இறந்த கார்லோஸ் அக்யுடிஸ் என்ற சிறுவனின் வாழ்வை புனிதத்தன்மை நிறைந்ததாக கத்தோலிக்க திருச்சபை அங்கீகரித்தது. வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சிறுவன் அக்யுடிஸ் தனது வாழ்நாளில் இறைவன் மீது கொண்ட நம்பிக்கை மற்றும் நற்கருணை மீது வைத்திருந்த உறுதியான பற்று ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தி இளையோருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்.
குறிப்பாக கம்ப்யூட்டரில் நிபுணத்துவம் பெற்றிருந்த அவர், அந்த தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாகவே தனது பக்தியை பரப்பினார். இதனால் ‘கடவுளின் இன்புளூயன்சர்’ என செல்லப்பெயரால் அழைக்கப்பட்டார். அவரை இன்டர்நெட் யுகத்தின் முதல் புனிதர் என முன்னாள் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவித்தார். இதன் மூலம் மில்லினிய யுகத்தின் முதல் புனிதர் என்று அக்யுடிஸ் அறியப்படுகிறார். அத்துடன் அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் போப் பிரான்சிஸ் காலத்திலேயே நடந்தன. ஆனால் பிரான்சிஸ் மறைவால் இந்த விழா தள்ளி வைக்கப்பட்டது.
இதைப்போல இத்தாலியில் பிறந்து தனதுவாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்த பையர் ஜார்ஜியோ பிரசாட்டியும் புனிதராக போப் 14-ம் லியோவால் அறிவிக்கப்பட்டார்.