திருகோணமலையில் பதாதைகளை மாடுகளின் மேல் தொங்கவிட்டு பொங்கல் கொண்டாட்டம்!
எங்களை பட்டினி போட வேண்டாம். எங்களைத் தொட வேண்டாம் என்ற பதாதைகளை மாட்டில் தொங்கவிட்டவாறு இன்று (16.01) திருகோணமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினால் குறித்த மாட்டுப்பொங்கல் கன்னியா பகுதியிலுள்ள பட்டியொன்றில் கொண்டாடப்பட்டது.
இதன்போது ஆக்களில் அரசியல் செய்து ஆண்டவனின் ஆசிர்வாதத்தை இழக்காதீர்கள்.
உங்களுக்கு உணவளிக்கும் எங்களை பாதுகாப்பது மனிதர் உங்களது கடமையாகும்.
எங்களது உணவை மறுப்பது உரிமை மீறலாகும் என்ற பதாதைகள் எழுதப்பட்ட பதாதையொன்றும் பட்டிக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. கன்னியா அகத்தியர் ஆதீனம் தம்பிரான் அவர்களினால் பூசை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை முன்னாள் நகர சபை உறுப்பினர் இலிங்க ராசா (சிங்கம்) மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சாந்தி சேவை சங்கத்தினர், சிவில் சமூக அமைப்பினர் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.