சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!
சிங்கப்பூரில் விடுமுறைக் காலம் நெருங்கும் வேளையில் பொட்டல விநியோக இணைய மோசடி குறித்து கவனமாய் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாண்டின் முதல் பதினொரு மாதங்களில், சுமார் 360 பேர் அத்தகைய மோசடிகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதனால் ஏற்பட்ட நட்டம் 560 ஆயிரம் வெள்ளிக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில்,
இணையத்தில் வாங்கிய பொருள்களை விநியோகிக்கக் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் பாதிக்கப்படுவோர் கேட்டுக்கொள்ளப்படுவர். Singapore Post போன்ற நிறுவனங்களிலிருந்து அனுப்பப்பட்டதைப் போல் அது இருக்கும்.
அதில் மோசடி-இணைப்பும் இடம்பெற்றிருக்கும். இணைப்பைச் சொடுக்குவோர், போலி-இணையத்தளத்திற்கு அழைத்துச்செல்லப்படுவர். அங்குத் தனிப்பட்ட விவரங்களும் வங்கித் தகவல்களும் அவர்களிடம் கேட்கப்படும்.
வங்கிக் கணக்கு அல்லது கடன்பற்று அட்டைகளிலிருந்து பணம் மாற்றப்பட்ட பிறகு, அவர்களுக்குத் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவரும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சீனப் புத்தாண்டு எனத் தொடர்ந்து விடுமுறைக் காலம் வருவதால், அத்தகைய மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும்.
SingPost கூடுதல் கட்டணம் கேட்டுக் குறுந்தகவலோ மின்னஞ்சலோ அனுப்பாது. SingPostஇற்கான எந்தக் கட்டணத்தையும் அதன் செயலி, SAM இயந்திரம், அஞ்சல் நிலையம் ஆகியவற்றின் மூலமே செலுத்தமுடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.