சுவிஸ் தீ விபத்து ; மேலும் 16 சடலங்கள் அடையாளம்
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களில், மேலும் 16 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ‘லு கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) மதுபான விடுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை 24 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பலியானவர்களில் 14 வயது சிறுமி உட்பட 9 பேர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாம்பெயின் போத்தல்களில் பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் (Sparklers), விடுதியின் கூரையில் இருந்த ஒலித்தடுப்பு பஞ்சுப் பகுதியில் (Acoustic foam) பட்டதே இந்த தீ விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விடுதி உரிமையாளர்கள் மீது தற்போது கவனக்குறைவாக மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.





