அமெரிக்காவில் நடுவானில் குலுங்கிய விமானம் அவசரமாக தரையிறக்கம் – 25 பயணிகள் காயம்

அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் கடுமையாக குலுங்கியதால் புதன்கிழமை மினியாபோலிஸ் – செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் குலுங்கிய நிகழ்வில் 25 பயணிகள் காயமடைந்தனர். அவர்களைக் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த பயணிகள் மட்டுமின்றி, விமானத்தில் மொத்தம் 275 பயணிகளும், 13 பணியாளர்களும் இருந்தனர். விமானத்தை சால்ட் லேக் சிட்டியில் இருந்து அமெரிக்க நேரப்படி மாலை 4:30 மணிக்கு புறப்படுத்தியதற்குப் பிறகு, எதிர்பாராத வானிலை காரணமாக மினியாபோலிஸுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அமெரிக்காவில் மட்டும் 2009 முதல் 207 பயணிகள், விமான குலுக்கலால் பெரும் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் பலர் 48 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (NTSB) தெரிவித்துள்ளது.
உலகளவில் ஆண்டுக்கு 3.5 கோடிக்கும் அதிகமான விமானங்கள் புறப்படும் நிலையில், அவற்றில் சுமார் 5,000 விமானங்கள் கடும் குலுக்கலால் பாதிக்கப்படுகின்றன.
மேலும், 2023 ஆம் ஆண்டில் விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட காயங்களில் 40% விமானங்கள் குலுங்கியதாலேயே ஏற்பட்டவை என சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICAO) தனது வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம், விமானப் பயணத்தில் எதிர்பாராத வானிலை மாற்றங்கள் உருவாக்கும் அபாயங்களை மீண்டும் முன்னிறுத்துகிறது.