15 ஆண்டுகளுக்குப் பிறகு மஹேலவின் இடத்தைப் பிடித்த பெத்தும் நிஸ்ஸங்க
சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டுள்ள ரி-20 துடுப்பாட்ட தர வரிசை பட்டியலுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதற்கமைய, சமீபத்திய காலங்களில் இலங்கை வீரர் ஒருவர் பதிவு செய்த மிக உயர்ந்த தரவரிசை நிலையை பெத்தும் தக்க வைத்துள்ளார்.
இந்த தரவரிசைப்படி, 789 புள்ளிகளைக் கொண்ட பெத்தும் கடந்த தரவரிசையில் இருந்து 10 புள்ளிகள் அதிகரித்து, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை பின் தள்ளியுள்ளார்.
தரவரிசையில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா 926 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் மற்றும் இந்தியாவின் திலக் வர்மா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளனர்.
தற்போதைய இலங்கை வீரருக்கான அதிகபட்ச தரவரிசையான 5வது இடத்தை பெத்தும் வகித்து வந்தார். மேலும் குசல் பெரேராவும் அதே இடத்தைப் பிடித்தார்.
எனினும் 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் அடைந்த அதிகபட்ச T20 தரவரிசை இதுவாகும்.
திலகரத்ன தில்ஷான் இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார், அதைத் தொடர்ந்து சனத் ஜயசூர்யா இரண்டாவது இடத்தையும், அதே ஆண்டில் குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
மஹேல ஜயவர்தன 2010ஆம் ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்தார், இதன் மூலம் 15 ஆண்டுகளில் ஒரு இலங்கை வீரர் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறையாகும்.
பெத்துமைத் தவிர, குசல் பெரேரா 9 வது இடத்திலும், வனிந்து ஹசரங்கா 6 வது இடத்திலும், நுவான் துஷாரா 8 வது இடத்திலும் உள்ளனர்.





