லட்ச கணக்கான பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிவு!
பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் மற்றுமொரு முறை கசிந்துள்ளது. இம்முறை சுமார் 2 லட்சம் ஃபேஸ்புக் பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை இழந்துள்ளனர்.
பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிவது இது முதல் முறையல்ல. 2021-ல் சுமார் 530 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. 2019-லும் இதே போன்றொதொரு கசிவுக்கு பேஸ்புக் ஆளானது. 2021 விவகாரத்தில் பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கத் தவறியதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் 265 மில்லியன் யூரோ அபராதத்துக்கு பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆளானது.
ஆனபோதும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிவதை ஃபேஸ்புக் தவிர்க்கத் தவறி வருகிறது. இம்முறை பேஸ்புக்கின் மார்க்கெட் பிளேஸ் உடன் தொடர்புடைய 2 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் இருள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பெயர், தொலைபேசி எண், மெயில் முகவரி மற்றும் பேஸ்புக்கில் பயனர் பதிவிட்டிருக்கும் அனைத்து சுயவிவரத் தகவல்களும் பகிரங்கமாக வெளியாகி உள்ளன. வழக்கம்போல இவை விற்பனைக்கும் கிடைக்கின்றன.
இவை ஹேக் செய்யப்பட்டனவா அல்லது ஃபேஸ்புக் பாதுகாப்பு வளையத்தின் குளறுபடியா என்ற தகவல் மெட்டா தரப்பிலிருந்து இன்னமும் வெளியாகவில்லை. 2021-ம் ஆண்டின் தரவு கசிவின்போது பேஸ்புக்கின் மூன்று தூண்களான மார்க் ஜுக்கர்பெர்க், கிறிஸ் ஹியூஸ் மற்றும் டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் ஆகியோரின் தொலைபேசி எண்களும் வெளியுலகில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஹேக் செய்யப்படுவது, பாதுகாப்பில் குறைபாடு ஆகியவற்றுக்கு அப்பால், கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா போன்ற சர்ச்சைகளின்போது, பேஸ்புக் நிறுவனமே தங்களது பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை மூன்றாம் ஏஜென்சிகளுக்கு திறந்து விட்டதாக குற்றசாட்டுக்கு ஆளானது. இதன் மூலம் தேசங்களின் தேர்தல் கண்ணோட்டத்தையும் பாதிக்க முடியும் என்ற அதிர்ச்சியையும் ஃபேஸ்புக் தந்தது.
பேஸ்புக் பயனர்கள் தங்களது தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் வெளியாவதை தடுக்க, பல்வேறு அடுக்கிலான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. இதற்கு ஃபேஸ்புக் கணக்கில் பயனர் தனது அமர்வுகளை அவ்வப்போது சரிபார்ப்பது முக்கியம். ஃபேஸ்புக் தளத்தில் கிடைக்கும் செயலிகள் மற்றும் கேம்ஸ் ஆகியவற்றை இயக்கும் முன்னராக அவற்றின் நிபந்தனைகளை ஆராய்வதன் மூலமாக அவற்றை ஏற்பதா மறுப்பதா என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.
பொதுவாக ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அவசியமின்றி பிறந்த தேதி, வங்கியுடன் தொடர்புடைய அலைபேசி எண், பணியாற்றும் நிறுவனம் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை தவிர்ப்பது நல்லது; அல்லது அவற்றை தெளிவற்றதாக பதிவிடலாம். இவற்றுக்கு அப்பால் அவ்வப்போது பாஸ்வேர்டுகளை மாற்றுவது மற்றும் 2 அடுக்கு சரிபார்ப்புகளை மேற்கொள்வது ஆகியவற்றையும் பின்பற்றலாம்.