மீண்டும் மன்னிப்பு கோரினார் போதனர் ஜெரோம் பெர்னாண்டோ
மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதனர் ஜெரோம் பெர்னாண்டோ, பௌத்த, இந்து, இஸ்லாமிய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.
நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள விழா மண்டபம் ஒன்றில் நேற்று (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய விரிவுரையில் கலந்துகொண்ட அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ ஒரு சமயப் பிரசங்கத்தில் தெரிவித்த கருத்து, புத்தர் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதித்ததாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி நாட்டில் பெரிதும் பேசப்பட்டது.
அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் அவருக்கு எதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் ஏற்கனவே வெளிநாட்டில் இருந்த ஜெரோம் பெர்னாண்டோ, சமீபத்தில் ஆன்லைனில் ஒரு மத விரிவுரையில் கலந்து கொண்டார்.
இதன்போது தனது கருத்தினால் ஏதேனும் உணர்வுகள் புண்பட்டிருந்தால், அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்பதாகக் கூறினார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தம்மைக் கைது செய்வதைத் தடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.