பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான பயணிகள் ரயில் – 30 பேர் காயம்

லாகூர் அருகே ஒரு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 30 பயணிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ரயில்வேயின் கூற்றுப்படி, லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்குச் சென்று கொண்டிருந்த இஸ்லாமாபாத் எக்ஸ்பிரஸ் லாகூரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஷேகுபுராவில் உள்ள கலா ஷா காகு என்ற இடத்தில் தடம் புரண்டது.
“ஷேகுபுராவில் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன, சுமார் 30 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்று ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர்.
இதற்கிடையில், பெட்டிகளில் சிக்கியுள்ள சில பயணிகளை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது.