‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கைகொடுக்கும் கிரிக்கெட்; பாகிஸ்தான் தொடர் மூலம் நிதி சேகரிப்பு
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மூலம் கிடைக்கும் முழு வருமானத்தையும், ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
‘டித்வா’ (Ditwah) புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மீட்பு மற்றும் புனர்வாழ்வுப் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் தொடரின் போது #VisitSriLanka எனும் விசேட ஹேஷ்டேக் (Hashtag) பிரசாரத்தையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர், எதிர்வரும் ஜனவரி மாதம் 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
விளையாட்டின் ஊடாக தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் கிரிக்கெட் சபை எடுத்துள்ள இந்த முயற்சிக்கு விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.





