இம்ரான் கானை எட்டு நாட்கள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை எட்டு நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்று நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை அவரது ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
70 வயதான இம்ரான் கான் கடந்த ஆண்டு அதிகாரத்தை இழந்தார், ஆனால் நாட்டின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி நபராக இருக்கிறார். பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஏழாவது முன்னாள் பிரதமர் இவர் ஆவார்.
செவ்வாயன்று அவரது அதிரடியான கைது அரசியல் கொந்தளிப்பை தீவிரமாக்கியது. கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில், கான் ஆதரவாளர்களுடனான மோதலில் 157 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தை தலையிட்டு ஒழுங்கை மீட்டெடுக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
முன்னதாக, தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் கானை 14 நாள் காவலில் வைக்கக் கோரியது, ஆனால் அதிகாரிகள் அவரை எட்டு நாட்களுக்கு தங்கள் காவலில் வைத்திருக்கலாம் என்று தீர்ப்பாயம் கூறியது.
இதற்கிடையில், கானின் சட்டக் குழு அவரை விடுவிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அவரைக் கைது செய்வதை சவால் செய்தமை குறிப்பிடத்தக்கது.