பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் குண்டுவெடிப்பு :50 பேர் பலி
தீர்க்கதரிசியின் பிறந்தநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் ஒரு பேரணியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது, குறைந்தது 100 பேர் காயமடைந்தனர், இதில் டஜன் கணக்கானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
“இது ஒரு தற்கொலைத் தாக்குதலாகத் தெரிகிறது” என்று மூத்த உள்ளூர் காவல்துறை அதிகாரி ஜாவேத் லெஹ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பலுசிஸ்தானில் “பயங்கரவாதிகளால்” நடத்தப்பட்ட குண்டுவெடிப்பை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
“மிலாதுல் நபி பெருநாள் ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கேவலமான செயல்” என்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது.
ஆயுதமேந்திய குழுக்கள் பேரணிகளை குறிவைக்கக்கூடும் என்பதால் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் பொலிஸாரைக் கேட்டுக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.