இலங்கையில் தொழில் முனைவோருக்கு மீள கடன் பெற சந்தர்ப்பம்

இலங்கையில் கடனை செலுத்தத்தவறிய சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு மீள கடன் பெற சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் வங்கிக் கடன் மறுசீரமைப்பின் போது 3ஆம் காலாண்டு வரை கடனை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
தற்போதைய வங்கிச் சட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டம் வரை கடனை செலுத்தத் தவறிய நபரொருவர் மறுசீரமைப்பின் பின்னரும் மூன்றாம் கட்டத்தை செலுத்தத் தவறியவராகவே கருதப்படுவார் என பிரதியமைச்சர், கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
அதன்காரணமாக குறித்த நபரால் புதிய கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
புதிய தீர்வின் படி இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் பரிந்துரைகளின் பேரில் கடனை மீளச் செலுத்தாதவர்கள் மேலதிக கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த புதிய தீர்வின் மூலம் இவ்வருட வரவு செலவுத்திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபா நிதி எவ்வித சிக்கலுமின்றி விநியோகிக்கப்படும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடனை மீளச் செலுத்தாத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டயக் கணக்கியல் நிறுவனம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் பரிந்துரைகளைப் பெறுவதற்கான கலந்துரையாடலுக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் 9 மாதங்களுக்குள் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படும் கடன்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நிதி பிரதியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.