இலங்கையில் ஆன்லைன் மூலம் முன்னெடுக்கப்படும் பாலியல் தொழில்
கடந்த கோவிட் காலத்தில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, தெருவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், ஆன்லைன் முறை மூலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை மேற்கொள்ளத் தூண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் இது குறித்த தகவல்கள் வெளியாயாகியுள்ளன.
குறித்த காலப்பகுதியில் தமது தொழிலில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தமது பணிகளைச் செய்யத் தூண்டப்பட்டதாகவும், அதற்காக வாடிக்கையாளர்கள் ஈஸி கேஷ் முறையில் பணம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த முறையின் மூலம் தொழிலை செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
மேலும், 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி, பிரதான புறநகர்ப் பகுதிகளில் வீதி விபச்சாரத்தில் ஈடுபட்ட சுமார் முப்பதாயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கடந்த காலத்தில் எதிர்கொண்ட பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக அங்கு இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தமது தொழிலை சட்டப்பூர்வமாக்காத காரணத்தினால், அத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதாகவும், பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெண் பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பொலிஸ் கைது செய்யும் போது விபச்சாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டாலும், போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், அதன் காரணமாக பெரும் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் அவர்கள் அங்கு கூறியுள்ளனர்.
அவர்களின் வாக்குமூலங்கள் நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டு, எந்த ஒரு பெண் பொலி ஸ் அதிகாரியும் இல்லாமல் காவலில் வைக்கப்படுவார்கள்.
இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்களால் தம்மை தாக்கியதாகவும், கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் இந்தக் குழுவினர் மேலும் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, சமூகத்தில் வீதி விபச்சாரிகள் என அழைக்கப்படும் பாலியல் தொழிலாளிகளின் தொழில் சட்டரீதியாக சட்டமாக்கப்படாமையால் பிரச்சினைகள் எழுந்தாலும் பொலிசார் அல்லது வேறு எவருக்கும் அவர்களைத் தாக்க உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.
எனவே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவசர அறிக்கை தயாரித்து பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.