இந்தியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – ஒருவர் கைது!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் குறித்த மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்திய சோதனைகளில் இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் இதனை சிறிய அளவில் உட்கொண்டாலும் ஆபத்தானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர், கொலைக்கு சமமான குற்றச்சாட்டுகள் மற்றும் மருந்து கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் சிரப்கள் அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பல நாடுகளில் அவற்றின் நுகர்வோர் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.
(COLDRIF) கோல்ட் ரிப் என்ற பெயரில் விற்கப்படும் மேற்படி சிரப்பானது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.