இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி ஜிம்பாபேவிற்கு எதிரான டி20 தொடரையும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
கொழும்புவில் உள்ள ஆர் பிரேம்தாசா மைதானத்தில் 3 போட்டிகளும் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை பார்ப்போம். புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து பங்குபெறும் முதல் தொடர் இதுவாகும். 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இப்போது இருந்தே அணியை தயார் செய்ய உள்ளனர்.
இந்தியா 3-0 என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2ம் திகதி நடைபெற உள்ளது. கடந்த 2024 டிசம்பருக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.
2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த போது இந்திய அணியில் விளையாடிய ஷுப்மான் கில், முகமது சிராஜ், விராட், ரோஹித் போன்ற மூத்த வீரர்கள் ஒருநாள் போட்டிக்கு திரும்ப உள்ளனர். இந்திய அணியில் வழக்கம் போல ரோஹித் மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாட உள்ளனர். ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடரில் இடம் பெறாததால் 6வது இடத்தில் யார் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த இடத்தில் ரிஷப் பந்த், ரியான் பராக், ஷிவம் துபே ஆகிய மூன்று பேரில் ஒருவர் இடம் பெறலாம். இருப்பினும் ஆல் ரவுண்டரை இந்திய அணி எதிர்பார்ப்பதால் துபே அல்லது பராக்கிற்கு வாய்ப்பு கிடைக்கும். ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வு வழக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஏழாவது இடத்தில் அக்சர் படேல் நிச்சயம் இருப்பார். அதனை தொடர்ந்து பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் உள்ளதால் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு ஜோடியாக இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருப்பார். கூடுதலாக ஒரு ஸ்பின்னர் தேவைப்பட்டால் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் இருப்பார். ரியான் பராக் அணியில் இருந்தால் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காது. அவருக்கு பதில் கலீல் அகமது அல்லது ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பு கிடைக்கும்.
ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.