நுவரெலியா – சீதையம்மன் ஆலயத்தில் சீ.சீ.டி.வி கெமராக்களை உடைத்து கொள்ளை!
நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் ஆலயத்தின் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கமராக்கள் உடைக்கப்பட்டு, இந்த கொள்ளை சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆலயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் ஆலயத்தின் உட் பகுதியில் பல்வேறு தேவைகள் நிமித்தமாக வைக்கப்பட்டிருந்த ஏழு உண்டியல்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இனம் தெரியாத நபர்கள் ஆலயத்திற்குள் பிரவேசித்து குறித்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தாள்களை களவாடிவிட்டு , சில்லறை காசுகளை ஆற்றில் கொட்டிவிட்டு சென்றுள்ளதாக ஆலயத்தில் நிர்வாக சபையில் பொறுப்பு வாய்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆலயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் சுமார் 53000 ரூபாய், உடைக்கப்பட்ட 07 உண்டியல்கள் என மொத்தமாக 07 இலட்சம் ரூபாய் களவாடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நுவரெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் ஆலயத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
திருடர்கள் ஆலயத்தின் ஆற்றங்கரை வழியாக வருகை தந்து வெளியில் பொருத்தப்பட் டிருந்த கமராவை உடைத்ததன் பின்பு ஆலயத்திற்கள் உட்பிரவேசித்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக ஆலயத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.





