நுகேகொடை கூட்டம் – நாமல், ரணில் கருத்து மோதலா?
																																		நுகேகொடை கூட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கக் கூடாது எனவும், மாறாக அவர் பங்கேற்றால் தான் வரப்போவதில்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார் என தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்தே, குறித்த கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அறிவிப்பு விடுத்தார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானகவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. ரணிலோ, மைத்திரியோ, நாமலோ யாரையும் பங்கேற்க வேண்டாம் என யாரும் கூறவில்லை. முதலாவது கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளை அழைப்பதில்லை என்ற முடிவை ஏற்பாட்டுக் குழுவே எடுத்தது. இது முதல் பேரணிதான், இத்துடன் அது நின்றுவிடப் போவதில்லை. அது தொடரும். அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்களில் தலைவர்களைக் களமிறக்குவோம்” என குறிப்பிட்டார்.
        



                        
                            
