இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட் அறிவிப்பு

மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏப்ரல் 2024 நிலவரப்படி, இன்ஸ்டாகிராமில் 2 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள யூசர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது உலகின் நான்காவது பெரிய சமூக வலைதளமாக இருக்கிறது.
யூசர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை கொண்டு வரும் மெட்டா அதன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆப்பிற்கும் அதன் தேவைக்கேற்ப புதுப்புது அப்டேட்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமின் கமெண்ட் பகுதியில் டிஸ்லைக் ஆப்ஷன் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்த உள்ளது.
போஸ்ட் மற்றும் ரீல் வீடியோக்களில் இடம்பெறும் கமெண்ட் பகுதியில் யூசர்கள் பயன்படுத்தும் விதமாக டிஸ்லைக் ஆப்ஷன் என்கிற ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருவதாக இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, இன்ஸ்டாகிராம் நீண்ட காலமாக டிஸ்லைக் ஆப்ஷனை சோதித்து வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசேரி ஒரு த்ரெட்ஸ் பதிவில், இந்த அம்சம் பயனர்களின் உரையாடல்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
“உங்களில் சிலர் இன்ஸ்டாகிராமின் கமெண்ட் பகுதியில், சோதனை முறையில் இருக்கும் ஒரு புதிய பட்டனைக் கவனித்திருக்கலாம். இது தனிநபர்கள் குறிப்பிட்ட கமெண்ட்டுக்கு தனிப்பட்ட முறையில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. எனினும் நான் இதுபற்றித் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: இது ஒரு சோதனை முயற்சியே, இதில் டிஸ்லைக்குகளின் மொத்த எண்ணிக்கை காட்டப்படாது, நீங்கள் குறிப்பிட்ட கமெண்ட்டிற்கு டிஸ்லைக் செய்துள்ளீர்கள் என்று யாருக்கும் தெரியாது. இறுதியாக, இந்த டிஸ்லைக் ஆப்ஷன் நெகட்டிவ் கமெண்ட்களை கீழே கொண்டு செல்ல உதவியாக இருக்கலாம். ”இது இன்ஸ்டாகிராமில் கமெண்ட்களை மேலும் வரவேற்கத்தக்கதாக மாற்ற உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று மொசேரி கூறினார்.
ஃபீடு போஸ்ட் மற்றும் ரீல்கள் என இரண்டிலுமே இந்த டிஸ்லைக் பட்டன் இடம்பெற்றிருக்கும். இதனை ஒருவர் கிளிக் செய்யும் பட்சத்தில், அதன் டிஸ்லைக் எண்ணிக்கைகள் காட்டப்படாது அல்லது நீங்கள் ஒரு கமெண்ட்டை டிஸ்லைக் செய்துள்ளீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படமாட்டாது. இருப்பினும், டிஸ்லைக்குகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட கமெண்ட்டின் ரேங்கைப் பாதிக்கும். எனினும், யூசர்கள் முதலில் நல்ல கமெண்ட்களை மட்டுமே பார்க்க முடியும்.
டெக் க்ரஞ்சின் கூற்றுப்படி, இந்த சோதனை கமெண்ட்கள் பிரிவின் தரத்தை மேம்படுத்த உதவும் நோக்கம் கொண்டது என்று மெட்டா கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது.”மக்களின் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போது மக்கள் எதை விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதையும், அதனை மேம்படுத்த உதவும் உத்திகளையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
”ஒரு ரீல் அல்லது ஃபீடில் உள்ள ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் கீழ் ஒரு புதிய பட்டனை நாங்கள் சோதித்து வருகிறோம், இது தனிநபர்கள் தங்களுக்குப் பிடிக்காத அல்லது அந்தக் கருத்து பொருத்தமானது என்று நினைப்பதை உடனடியாக முடிவெடுக்க இந்த அம்சம் உதவியாக இருக்கும். மேலும் இதைத் தொடங்குவதற்கு முன்பாக, ஒரு சிறிய குழுவிலான மக்களுடன் முதலில் இதனைச் சோதித்துப் பார்ப்போம். பின்னர், யூசர் அனுபவத்தை மேம்படுத்த, இந்த கமெண்ட்களை கமெண்ட் பாக்ஸின் கீழே கொண்டு செல்வதையும் நாங்கள் சோதிக்க உள்ளோம்” என்பதையும் டெக்க்ரஞ்ச் மேற்கோள் காட்டியது.
இன்ஸ்டாகிராமின் இந்தப் புதிய டிஸ்லைக் பட்டன், 2021 இல் டிஸ்லைக் எண்ணிக்கையைக் காட்டுவதை நிறுத்திய யூடியூபின் கமெண்ட் டவுன்வோட்டைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பொருத்தமான விவாதங்களை முன்னிலைப்படுத்த ரெடிட்டும் இதேபோன்ற டவுன்வோட் மெக்கானிசத்தைப் பயன்படுத்துகிறது.