வடகொரியாவில் AI தொழில்நுட்பத்துடன் தயாரான தற்கொலை ட்ரோன் சோதனையை பார்வையிட்ட அதிபர் கிம்

தற்கொலைப் படையின் வானூர்திகளை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பார்வையிட்டதாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமான KCNA தெரிவித்து உள்ளது.
ஆளில்லாத அந்த வானூர்திகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவானவை என்றும் நவீன ஆயுத உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவுத் திறனைப் புகுத்துவதற்கு வடகொரியாவில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அச்செய்தி நிறுவனம் வியாழக்கிழமை (மார்ச் 27) கூறியது.
நிலத்திலும் கடல் பகுதியிலும் எதிரிகளின் நடவடிக்கைகளை கண்டறியும் திறன் படைத்த, புதிதாக மேம்படுத்தப்பட்ட வானூர்திகள் சோதனை செய்யப்படுவதை கிம் பார்வையிட்டார்.
வான்வெளியில் தோன்றும் ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் புதிய விமானத்தையும் (AEW) முதன்முறை வடகொரியா அறிமுகம் செய்துள்ளது.
வடகொரியாவின் ஆகாயத் தற்காப்பு முறை பழமையானது. அதன் திறனை மேம்படுத்தும் விதமாக அதுபோன்ற நடவடிக்கைகளை அந்நாடு எடுத்து வருகிறது.