ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நிஹான் ஹிடாங்கியோ (Nihon Hidankyo) எனும் ஜப்பானிய அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
அணுவாயுதங்கள் இல்லாத உலகை உருவாக்கும் முயற்சிகளை நிஹான் ஹிடாங்கியோ மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் அணுவாயுதத் தாக்குதல்களில் உயிர்தப்பியோர் இடம்பெற்றுள்ளனர்.
அணுவாயுதங்களை ஏன் இனி பயன்படுத்தக்கூடாது என்பதை சாட்சியங்களின் வாக்குமூலங்கள் வாயிலாக எடுத்துக்காட்டியதற்கு நிஹான் ஹிடாங்கியோ நோபல் குழு பாராட்டியது.
1945ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள்மீது மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்களில் உயிர் தப்பியோர் தொடங்கிய நிஹான் ஹிடாங்கியோ, ஹிபாகுஷா என்றும் அழைக்கப்படுகிறது.
“ஒருநாள், ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுத் தாக்குதல்களில் உயிர்தப்பியோர், அந்நிகழ்வுகளை நேரில் சந்தித்த சாட்சிகள் என்ற முறையில் வரலாற்றைப் பகிர்ந்துகொள்ள இருக்கமாட்டார்கள்,” என வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11) அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளரை அறிவிக்கும்போது நோபல் குழு குறிப்பிட்டது.
“ஆனால், ஜப்பானில் நிகழ்வுகளை நினைவுகூரும் வழக்கம் வலுவாக இருப்பதுடன் அங்கு தொடர்ந்து முனைப்புடன் செயல்படுகிறார்கள். அவ்வாறே அந்நாடு நிகழ்வுகளை நேரில் எதிர்கொண்டவர்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறது,” என்றும் குழு சுட்டியது.