மக்ரோன் மீது நம்பிக்கை இல்லை!!! பிரான்சில் அமைச்சரவை மாற்றம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் தீர்மானங்கள் நாட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் பின்னணியில், மக்ரோன் தனது அமைச்சரவையில் திருத்தம் செய்துள்ளார்.
கல்வி, வீடமைப்பு, உள்கட்டமைப்பு அமைச்சுகளில் பணியாற்றிய அமைச்சர்களை மாற்றி தனது அதிகாரத்தை காப்பாற்ற பிரான்ஸ் அதிபர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தச் சட்டங்கள் அவரது சொந்த அரசாங்கத்திலிருந்தே எதிர்ப்பைப் பெற்றுள்ளன.
மேலும், கடந்த மூன்று வாரங்களாக, பொருளாதார பிரச்னைகள் உள்ளிட்ட பல பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு, பிரான்சில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக சமீபத்தில், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நஹெல் எம் என்ற வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞரின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்சின் நகரங்கள் முழுவதும் போராட்ட அலைகள் எழுந்தன.
பிரான்ஸ் அதிபரின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்காலத்தில் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.